|
|
திருக்குறள்: ஒரு முன்னுரை
பெயரில்லாத நூலாசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட பெயரில்லாத நூல் குறள் என்று திருக்குறளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்த M. அரீல் குறிப்பிட்டதில் அதிசயம் ஒன்றும் இல்லை. திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் என்ற பெயர்கள் காரணப் பெயர்கள். வள்ளுவர் என்பது அவருடைய குலப்பெயரென்பதும், குறள் என்பது திருக்குறள் வடிவமைத்த வென்பாவின் பெயர் என்பதும் கருத்து வேறுபாடின்றி பலவராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. திருக்குறளை முப்பால், பொய்யாமொழி, தமிழ்மறை, பொதுமறை எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தாலும், திருக்குறள் என்ற பெயரே நிலைத்து வந்துள்ளது. அதுபோலவே, வள்ளுவரை தேவர், நாயனார், தெய்பப்புலவர், பொய்யில் புலவர் மற்றும் பெருநாவலர் என்ற பெயர்களால் சிலரால் குறிப்பிடப்பட்டாலும், `திருவள்ளுவர் என்ற பெயரே நிலைத்து வந்துள்ளது.
நூலாசிரியர் வரலாறு யார் இந்த திருவள்ளுவர், அவர் எங்கு பிறந்தார், எப்பொழுது வாழ்ந்தார் மற்றும் அவருடைய வாழ்க்கை வரலாறு என்ன? இதற்கெல்லாம் விடை காண்பது கடினம். சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் திருக்குறளையும் திருவள்ளுவரையும் குறிப்பிடப்பட்டிருப்பதால், மூன்றாம் மற்றும் நான்காம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட இக்காப்பியங்களுக்கு முன்பே திருக்குறளை வள்ளுவர் இயற்றியிருக்க வேண்டும் என்பது ஒரு பொதுவான கருத்து.[1] திருக்குறளில் வரும் தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை என்கிற 55-ஆவது குறளைத்தான் இவ்விரு காப்பியங்களிலும் இளங்கோ அடிகளும் சீத்தலைச் சாத்தனாரும் குறிப்பிட்டுள்ளனர். இவ்விரு செய்யுள்களையும் இப்போது காணலாம்:
தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாளைத் தெய்வம் தொழுத கையைத்திண்ணிதாய் தெய்வமாய் மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து (சிலப்பதிகாரம்)
தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாளைத் பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேராய் (மணிமேகலை)
வள்ளுவர் பிறந்து வளர்ந்தது சென்னையிலுள்ள மயிலையில் என்றும், அவருடைய துணைவியார் வாசுகியென்றும் சொல்லுவர். ஆனால் இதற்கெல்லாம் ஆதாரம் கிடையாது. நம் நாட்டில் உறுவாகிய பெரும்பாலான நூல்களுக்கெல்லாம் இதே கதிதான். பலவற்றிற்கு நூலாசிரியர் யாரென்று தெரியாது. அவ்வாறு தெரிந்தாலும், அவர்களுடைய வரலாறு தெரியாது. நூல்களளப் பாதுகாத்த நம் முன்னோர்கள், நூலாசிரியர்களைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை. அவ்வாறு எழுதியிருந்தாலும், அவையாவும் மிக்கவாரும் கட்டுக்கதைகளாகவே (Hagiography) உள்ளன. வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதாமற் போனதற்குக் காரணம், உரைநடையில் நுல்களள எழுதுகிண்ற வழக்கம் இல்லாததே என்றுகூடச் சொல்லலாம் எனக்குறிப்பிடுகிறார் துறைவன் எனும் ச. கந்தஸ்வாமி.[2] திருக்குறளிலுள்ள எல்லா குற்ட்பாக்களும் வள்ளுவரால்தான் இயற்றப்பட்டது என்பதற்கு அதாரமொன்றுமில்லை. இந்த சந்தேகம் பொதுவாக உலகத்திலுள்ள மற்ற எல்லா நீதி மற்றும் வேத நூல்களுக்கும் பொறுந்தும். குறளில் ஒவ்வொரு அதிகாரமும் சரியாக 10 குரட்பாக்களைக் கொண்டுள்ளதையும், ஒரே கருத்துடைய சில குறட்பாக்கள் ஒரே அத்தியாயத்திலும் மற்றும் பிற அத்தியாயங்கலிலும் இடம்பெறுவதையும் சுட்டிக்காட்டி, திருக்குறளை பல நூலாசிரியர்கள் இயற்றியிருக்கலாம் என குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த P.S. சுந்தரம் குறிப்பிடுகிறார்.[3] எது எங்ஙனமிருக்கினும், குறளை எழுதியவர் திருவள்ளுவரே என்ற நிலை இதுவரை நிலைத்துள்ளது. இனி வள்ளுவரை விட்டுவிட்டு அவர் எழுதிய குறளுக்கு வருவோம். அதிலாவது அவரைப்பற்றி ஏதாவது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்று நினத்தால் நமக்கு பெருத்த ஏமாற்றம்தான். வள்ளுவர் மற்றுமல்ல, பொதுவாக இந்திய நாட்டில் உறுவான இலக்கியங்களிலெல்லாம் நூலாசிரியரைப்ப்ற்றிய குறிப்புகள் ஒன்றும் இருப்பதில்லை. திருமந்திரத்தில் திருமூலரைப்பற்றிக் குறிப்பிட்ட அளவும்ககூட வள்ளுவரைப்பற்றி குறளில் குறிப்பிடவில்லை. ஒருவர் எழுதிய நூலிலிருந்த அவர் வாழ்ந்த காலகட்டம் எவ்வாறு இருந்திருக்க வேண்டும், அவருடைய சிந்தனைகளும் வாழ்க்கை நடைமுறையும் எவ்வாறு இந்திருக்க வேண்டும் என்பதை பொதுவாக ஊகிக்கமுடியும். ஆனால், குறட்பாக்கள் அனத்தும் எந்த ஒரு மன்னரையோ, ஊரையோ, கடவுளையோ குறிப்பிடாமல் பொதுவான கருத்துக்களைச் சொல்லுவதால், வள்ளுவர் வாழ்ந்த காலகட்டத்தை இவ்வாயிலாகவும் ஊகிக்க முடிவதில்லை.
ஒரு பொது மறை திருக்குறள் ஒரு நீதி நூல், வேத நூலல்ல. வேதங்களளப்போல வெகுகாலமாக சொல்நடையில் இருந்த பல்லாயிரக்கணக்கான குறள்களிலிருந்து எழுத்துநடையில் ஒரு தொகுப்பாளர் (Redactor) ஒருவரால் உறுவாக்கப்பட்ட ஒரு திரட்டு (Anthology) அல்ல திருக்குறள். ஒரு நூலாசிரியாரால் தம் காலத்தில் வழங்கிய இலக்கிய நூல்கள், சமய தத்துவ சாத்திரங்கள் எல்லாவற்றையும் தெளிவாக அராய்ந்துபார்த்த பிறகே, தம்முடைய குறளை இயற்றியிருக்கவேண்டும்.[4] எந்த ஒரு சமயத்தினையும் சாராமல் எழுதப்பட்ட ஒரு நூல் என்ற ஒரு பரவலான கருத்து நிலவுவதால், திருக்குறளை தமிழ் வேதம் (Bible of Tamils) என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது. திருக்குறளைப் படிக்கும்போது, வள்ளுவர் ஒரு சாதாரன மனிதன் இவ்வுலகில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தினாரே தவிற, தமிழிலுள்ள மற்ற நூல்களான திருமந்திரம், திருவாய்மொழி, தேவாரம் மற்றும் திருப்பாவை ஆகியவற்றைப்போல தெய்வ வழிபாட்டை அல்லது ஒரு சமயக் கொள்கைகளையோ வலியுறுத்தவில்லை. இக்காரணத்தினால், திருக்குறள் ஒரு பொது மறை என்று எல்லொராலும் போற்றப்பட்டுவந்தாலும், திருக்குறளில் தெய்வ வழிபாட்டு மற்றும் கடவுள் வாழ்த்து முறைகளும் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதே உண்மை. வள்ளுவர் காலத்தில் இருந்த இந்து, பௌத்த மற்றும் சமண மதக் கோட்பாடுகள், கொள்கைகள், நீதி மற்றும் அறக் கருத்துகளைக் கருத்தில்கொண்டு திருக்குறளை நடுநிலையோடு ஆறாய்ந்தால், வள்ளுவர் சமண மதக் கருத்துகளை மையமாகக்கொண்டே தன்னுடைய நூலை இயற்றினார் என்பது தெளிவாகிறது. இவ்வாராய்ச்சியின் முடிவுகளை இங்கே காணலாம்:
தமிழ் இலக்கிய வரலாற்றில் திருக்குறளின் இடம் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை (அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நற்றினை, பரிபாடல், கலித்தொகை) ஆகிய தொகுப்பு நூல்களுக்குப்பிறகு வந்ததுதான் குறள். பதினென்கீழ்கணக்கு என்ற 18 நூல்களையுடைய தொகுப்பில் ஒன்றுதான் திருக்குறள். தமிழ் இலக்கிய வரலாற்றிலே மிகச்சிறந்த நூல்களுள் ஒன்றாக திருக்குறள் கருதப்படுகிறது. வள்ளுவர், கம்பர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகிய மூவரும் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவர்கள். நீதி நூட்களுக்கு (Ethical literature) ஒரு திருக்குறளும், காப்பியங்களுக்கு (Epics) ஒரு கம்பராமாயணமும், பக்தி இலக்கியத்திற்கு (Devotional literatures) ஒரு திருவாசகம் எனக்கூறலாம். மற்ற நூல்களுக்கெல்லாம் இல்லாத ஒரு சிறப்பு திருக்குறளுக்கு உள்ளது என்றால் அதிலுள்ள கருத்துக்கள்தான்.
திருக்குறளின் உரையாசிரியர்கள் திருக்குறளுக்கு உரையெழுதிய பழம்பெரும் உரையாசிரியர்கள் பத்து என்பர். அவர்களுள் பிகப்புகழ் பெற்றவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரிமேலழகர். மற்ற உரையாசிரியர்களுள், மனக்குடவர், பெருமாள், பரிதியர் மற்றும் காளிங்கர் ஆகியோருடைய உரைதான் நமக்கு கிடைத்துள்ளன.[5],[6] இதர நூலாசிரியர்களான தருமர், தாமத்தர், நச்சர், திருமலையர் மற்றும் மல்லர் ஆகியோரின் உரைகள் காலப்போக்கில் அழிந்து போய்விட்டன.
காலத்தால் அழியாத காவியம்
படிச்சவன் பாட்டைக் கெடுத்தான் எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்பது ஒரு உலகப் பழமொழி. எந்த ஒரு பாடலானாலும் சரி நூலானாலும் சரி, கேட்டும் பார்த்தும் எழுதும்பொழுது, கண்ணயர்வு மற்றும் நகல் எழுதுவாரின் கவணக்குறைவாலும் ஆங்காங்கே ஏட்டில் சில மாறுபாடுகளும், சில நேரம் எழுத்துக்கள் விடுபடவும் நேரலாம். காலப்போக்கில் ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்கள் இங்ஙணம் ஏற்பட்ட மாறுதல்களால் அந்நூலின் நகலை பல்வேறு பாடவேறுபாடுகளுடன் வைத்திருக்க நேரிடுகிறது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் திருக்குறள் அராய்ச்சிப் பகுதியின் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்த மு. சன்முகம் பிள்ளை அவர்கள், 1971-ஆம் ஆண்டு வெளியிட்ட யாப்பு அமைதியும் பாட வேறுபாடும் என்ற முதல் திருக்குறள் ஆராய்ச்சி நூலில் 305 பாடல்களில் பாடாவேறுபாடுகள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.[7] அவர் குறிப்பிட்ட சில பாடவேறுபாடுகளைக் காண்போம்:
1.
ஒரு நாளை
எனுஞ்சொற்கள்
ஒரு நாளே
என்று
(குறள் 156)
"Complete in itself, the sole work of its author has come down the esteem of ages absolutely uninjured, hardly a single various reading of any importance being found" (G.U. Pope, 1886) ந.வ.கு. அஷ்ரப் ஜூன், 2005. [1] Diaz, S.M. 2000. Introduction. In: Tirukkural. Ramanandha Adigalar Foundation, Coimbatore. Volume I and II. Pp 31 [2] துறைவன். ச. கந்தஸ்வாமி. 1979. திருக்குறள் ஒரு அறிமுகம். பப்ளிகேஷன்ஸ் டிவிசன். தகவல் ஒலிபரப்பு அமைச்சகம். இந்திய சர்க்கார். Pp 3. [3] Sundaram, P.S. 1990. Tiruvalluvar: The Kural. Penguin Books. Pp 10 [4] துறைவன். ச. கந்தஸ்வாமி. 1979. திருக்குறள் ஒரு அறிமுகம். பப்ளிகேஷன்ஸ் டிவிசன். தகவல் ஒலிபரப்பு அமைச்சகம். இந்திய சர்க்கார். பக்கம் 5 [5] Sundaram, P.S. 1990. Tiruvalluvar: The Kural. Penguin Books. Pp 9 [6] Subrahmanian, N. and Rajalakshmi, R. 1984. The Concordance of Tirukkural (with critical introduction). Malar Printers, Madurai. Pp xiii [7] மு. சன்முகம் பிள்ளை. 1971. யாப்பு அமைதியும் பாட வேறுபாடுன் (Prosody and various readings in Tirukkural). சென்னைப் பல்கலைக் கழகம். பக்கம் 115
|
|